ஆஸ்திரேலியா ஏ அணியுடனான போட்டியில் இந்திய ஏ அணியினர் பந்தினை சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா ஏ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது போட்டி நாளை (நவ.7) நடைபெறவிருக்கிறது.
இந்தியா – ஆஸி. இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவ.26ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பந்தினை சேதப்படுத்திய விவகாரம் பெரிதாகியுள்ளது.
இஷான் கிஷன் நடுவருடன் வாக்குவாதம் செய்ததும் சர்ச்சையாகியுள்ளது.
நடுவர்களுடன் வாக்குவாதம்
நவ.3ஆம் தேதி முதல் டெஸ்ட்டின் 4ஆம் நாள் இந்த விவகாரம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பந்து சேதமடைந்துள்ளதால் அதனை மாற்றியதாக நடுவர் கூறியுள்ளார். அதற்கு இந்திய ஏ அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது ஸ்டம்ப் மைக்கில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த வாக்குவாதத்தில் நடுவர் ஷாவ்ன் ரைக், “நீங்கள் பந்தினை சேதப்படுத்தியதால் மாற்றினோம். வீண் விவாதம் வேண்டாம். விளையாடுங்கள்” என்பார். அதற்கு இந்தியா ஏ அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் , “முட்டாள்தனமானது” எனக் கூறியுள்ளார்.
அதற்கு நடுவர் இஷான் கிஷனை எச்சரித்துள்ளார். பின்னர் ஆஸி. ஏ அணி போட்டியில் வென்ற பிறகு பந்து சேதமடைந்ததால் மாற்றினோம் என நடுவர்கள் கூறியுள்ளார்கள். இருப்பினும் இஷான் கிஷன் மீது எந்தவிதமான ஒழுங்கீன நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வார்னர் கூறியது என்ன?
இது குறித்து டேவிட் வார்னரிடம் கேள்வி கேட்கப்பட்டட்போது அவர் கூறியதாவது:
கிரிக்கெட் ஆஸ்திரேலியாதான் இதன் கடைசிகட்ட தீர்ப்பினை சொல்ல வேண்டுமில்லையா? இந்திய அணி கோடைக்காலத்தில் இங்கு வந்து விளையாடவிருப்பதால் இந்த பிரச்னையை விரைவாக முடித்திருப்பார்கள்.
ஏதாவது நடந்திருந்தால் நடுவர்கள் நிச்சயமாக கணித்திருப்பார்கள். அப்படியிருந்தால் அதை ஃபாலோவ் செய்திருப்பார்கள். இந்தக் கேள்விகளுக்கு கள நடுவர்கள் அல்லது போட்டி நடுவர்கள் பதிலளிக்க வேண்டும். கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில் அப்படி எதுவும் பார்க்கவில்லை என்றார்.
டேவிட் வார்னர் 2018இல் பந்தினை சேதப்படுத்தியதற்காக 2 ஆண்டுகள் கிரிக்கெட்டில் விளையாடமல் இருந்ததும் சமீபத்தில் அவரது கேப்டன்சிக்கான வாழ்நாள் தடைவிதிப்பு நீக்கப்பட்டதால் சிட்னி அணிக்கு கேப்டனானதும் குறிப்பிடத்தக்கது.