இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் கில்லா? ஜெய்ஸ்வாலா? 7 ஆஸ்திரேலிய வீரர்கள் பதில்

இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் யார்? என்று சில ஆஸ்திரேலிய வீரர்களிடம் கேட்கப்பட்டது.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமுறை சிறந்த வீரர்களாக சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர். அதில் ஏற்கனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் சுப்மன் கில் ஆல் பார்மட் பிளேயர் என்ற பாராட்டுகளை வாங்கியுள்ளார். அதனாலேயே அவரை வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காக பிசிசிஐ தற்போது துணை கேப்டனாக அறிவித்துள்ளது.

மறுபுறம் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால் கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான அறிமுக போட்டியிலேயே 171 ரன்கள் விளாசிய அவர் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்தார். மேலும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாக் அவுட் சுற்றில் சதமடித்த ஜெய்ஸ்வால் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். அதை விட கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்த அவர் 4 – 1 (5 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் யார் என்று சில ஆஸ்திரேலிய வீரர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு ஸ்டீவ் ஸ்மித் "ஜெய்ஸ்வால் அடுத்த தலைமுறையின் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்" என்று பதிலளித்தார்.

அதேபோல "ஜெய்ஸ்வால் அடுத்த பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நான் நினைக்கிறேன்" என நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் கூறினார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் "3 வகையான கிரிக்கெட்டிலும் ஜெய்ஸ்வால் நல்ல வீரராக தெரிகிறார்" என்று கூறினார்.

மேலும் அலெக்ஸ் கேரி, நேதன் லயன் ஆகியோரும் "ஜெய்ஸ்வால்" என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்தனர்.

மறுபுறம் கேமரூன் கிரீன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சுப்மன் கில் அடுத்த சூப்பர்ஸ்டாராக வருவார் என்று தேர்வு செய்தனர்.

மொத்தத்தில் 5 பேர் ஜெய்ஸ்வாலையும் 2 பேர் கில்லையும் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட்; 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு… தென் ஆப்பிரிக்கா 106 ரன்களில் ஆல் அவுட்