இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்துக்கு கடும் போட்டி!

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்துக்கு கடும் போட்டி!இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்துக்கு வீரர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்துக்கு வீரர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

டி20 உலகக் கோப்பையை வென்றவுடன் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, சர்வதேச டி20 போட்டிகளில் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர். இதனையடுத்து, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் களமிறக்கப்படப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில் ஜிம்பாப்வேவுக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இளம் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் (ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா) இடம்பெற்று விளையாடினர். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அடுத்த மூன்று போட்டிகளில் ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் அணியில் இடம்பெற்று விளையாடிய 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் நான்கு பேரில் கேப்டன் ஷுப்மன் கில் மிகக் குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 125.92 ஆகும். மற்ற தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 165.88, ருதுராஜ் கெய்க்வாட் 158.33 மற்றும் அபிஷேக் சர்மா 174.64 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இடம்பிடிக்க இவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து பேசிய ஷுப்மன் கில் கூறியதாவது: தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுவது மிகவும் நல்ல விஷயம். அனைவரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர்கள் தொடக்க ஆட்டக்காரராக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடுவது தெரிகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்துக்கு ஆரோக்கியமான போட்டி இருப்பது எந்த ஒரு நாட்டுக்கும் அல்லது கிரிக்கெட் வாரியத்துக்கும் சிறப்பான விஷயமே என்றார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மன் கில் (170 ரன்கள், 5 போட்டிகள்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (141 ரன்கள், 3 போட்டிகள்), ருதுராஜ் கெய்க்வாட் (133 ரன்கள், 4 போட்டிகள்) மற்றும் அபிஷேக் சர்மா (124 ரன்கள், 5 போட்டிகள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எந்த வீரர்கள் தொடர்ச்சியாக இடம்பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்