இந்திய ஜனநாயகத்தில் ராகுல்காந்தி ஒரு கரும்புள்ளி – பா.ஜனதா விமர்சனம்

புதுடெல்லி,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஆன பிறகு அவர் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை. டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகருக்கு சென்ற ராகுல் காந்திக்கு அங்கு இருக்கும் இந்திய வம்சாவளியினரும், காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல்காந்தி 10-ந் தேதிவரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது, ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தேசிய பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.

இந்தநிலையில், இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி என்று பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விமர்சித்துள்ளார்.

பாஜக தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கவுரவ் பாட்டியா கூறியதாவது:-

காங்கிரஸ் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தக் ராகுல் காந்தி முயல்கிறார். ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற, பகுதிநேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவராக பதவியேற்றதிலிருந்து மக்கள் பெரும் பொறுப்பை அவரது தோள்களில் சுமத்தி உள்ளனர்.

ஆனால் இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி என்று கூறுவதில் நான் வருத்தப்படுகிறேன். வெளிநாட்டிற்குச் சென்றால் என்ன பேசுவது என்று கூட அவருக்குத் தெரியாது. ராகுல் காந்தி இந்தியாவை பலவீனப்படுத்தி பேசி இருக்கிறார். அவர் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறார். காங்கிரஸ் தனது ஆட்சியின் போது சீனாவுடன் கட்சிக்குக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்