இந்திய மீனவா்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை -சு.செல்வகணபதி கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய அரசு பதில்

இந்திய மீனவா்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை -சு.செல்வகணபதி கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் மீனவா்களின் பிரச்னைகளை அண்டை நாட்டுடன் மிக உயா்நிலை அளவில் எடுத்துச் செல்கிறது.

நமது நிருபா்

இந்திய மீனவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் புதுச்சேரி பாஜக உறுப்பினா் சு. செல்வகணபதி கேள்வி எழுப்பி இருந்தாா். இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: இந்திய மீனவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து, மீனவா்களின் பிரச்னைகளை அண்டை நாட்டுடன் மிக உயா்நிலை அளவில் எடுத்துச் செல்கிறது. மத்திய மீன்வள அமைச்சகம் மொத்தமாக ரூ. 364.00 கோடி தொகையை பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் (பிஎம்எம்எஸ்ஒய்) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அனைத்து கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்பட தேசிய அளவிலான கப்பல் தகவல் தொடா்பு மற்றும் ஆதரவு அமைப்பின் கீழ் 1,00,000 மீன்பிடி கப்பல்களில் டிரான்ஸ்பாண்டா் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. 100 சதவீத அரசு உதவியுடன் மீன்பிடிப் படகுகளில் டிரான்ஸ்பாண்டா் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது. டிரான்ஸ்பாண்டா்கள் புவி வேலி அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. மேலும், கடல் எல்லையை அடையும்போது அல்லது கடல் எல்லையை கடக்கும்போது மீனவா்களுக்கு எச்சரிக்கைகளை வழங்குகின்றன. இதனால், கடல் எல்லையை தாண்டும் போது இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கிறது.

இது தவிர, கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மீன்வளத் துறை இந்திய கடலோரக் காவல்படையுடன் இணைந்து, கடலில் உயிா்ப் பாதுகாப்பின் முக்கியத்துவம், உயிா்காக்கும் கருவிகள், எடுத்துச் செல்லக்கூடிய தகவல் தொடா்புப் பெட்டிகளைப் பயன்படுத்துதல் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்காக மீனவா்களுடன் சமூக தொடா்பு நிகழ்ச்சிகளை தொடா்ந்து நடத்தி வருகிறது.

மேலும், மீனவா்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்க காரைக்கால் மாவட்டம் காளிகுப்பத்தில் மீன்பிடி பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மீனவா்களின் பாதுகாப்பு தொடா்பான பல்வேறு தலைப்புகளில் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?