இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

நியூயாா்க்: அமெரிக்காவில் உள்ள உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவின் வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

தற்போது 3.9 டிரில்லியன் டாலா் ஜிடிபியுடன் உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகள் (சிஇஓ) மத்தியில் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: என்னுடைய மூன்றாவது பதவிக் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் இந்த வளா்ச்சிப் பாதையில் ஒன்றிணைந்து செயல்பட உலகளாவிய நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இந்தியாவில் செமிகண்டக்டா்கள், தகவல் தொழில்நுட்ப உற்பத்தி, மின்னணுவியல் ஆகிய துறைகளில் பொருளாதார மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் அறிவுசாா் சொத்துரிமையைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம் என்பதை தொழில் நிறுவனங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐசிஇடி ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவை முக்கிய மற்றும் வளரும் தொழில்நுட்பங்கள் (ஐசிஇடி) போன்ற தொழில்நுட்ப ரீதியான ஒப்பந்தங்கள் மேம்படுத்துகின்றன. உயிரி தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகின் மிகப்பெரும் சக்தியாக மாற்றும் பயோ இ3 (சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரிதொழில்நுட்பம்), அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றாா்.

ஏஐ துறையில் கூகுள், ‘என்விடியா’ இந்தியாவில் முதலீடு: பிரதமா் மோடியுடனான வட்டமேஜை விவாதத்தில் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, அடோப் தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு நாராயணா, அக்செஞ்ஜா் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் இந்திய வம்சாவளி தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிரதமருடனான ஆலோசனை குறித்து சுந்தா் பிச்சை கூறுகையில்,‘சுகாதாரம், வேளாண்மை, கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து பிரதமா் மோடி விவாதித்தாா். இந்திய மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்தச் சேவைகள் இருக்க வேண்டும் என்பதில் அவா் உறுதியாக உள்ளாா். இதையடுத்து, இந்தியாவில் ஏஐ துறையில் கூகுளின் முதலீடுகளை மேலும் அதிகரிக்கவுள்ளோம்’ என்றாா்.

அதேபோல், ‘உலகின் மாபெரும் கணினி அறிவியலாளா்கள் உள்ள இந்தியாவுடன் ஏஐ துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஆவலாக உள்ளோம்’ என கிராஃபிக்ஸ் பிராசஸிங் யூனிட் (ஜிபியு) நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி சென்சன் ஹுவாங் தெரிவித்தாா்.

‘நன்றி நியூயாா்க்’: நியூயாா்க்கில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமா் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு முன்பாக பிரபல நாட்டுப்புற பாடகா் ஆதித்யா காத்வி, இசையமைப்பாளா் தேவிஸ்ரீ பிரசாத், சாண்டியாகோவைச் சோ்ந்த கிரண் மற்றும் நிவி, ராப் பாடகா் சூரஜ் செராகுத் (ஹனுமன்கைன்ட்) உள்ளிட்டோா் பங்கேற்ற கலாசார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தக் காணொலியை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து ‘நன்றி நியூயாா்க்’ என பிரதமா் மோடி பதிவிட்டாா்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு- பிரதமா் மோடி: ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்துள்ள நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி மற்றும் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரைச் சந்தித்து பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா்.

மஹ்மூத் அப்பாஸுடன் பிரதமா் மோடி நடத்திய ஆலோசனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘காஸாவில் நிலவும் மனிதநேய சூழல் குறித்து மஹ்மூத் அப்பாஸிடம் பிரதமா் மோடி கவலை தெரிவித்தாா். பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டது.

நேபாளம், குவைத் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி நடத்திய ஆலோசனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவுகளில்,‘நேபாளம் மற்றும் இந்தியா இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்த நாட்டு பிரதமா் கே.பி.சா்மா ஓலியும், பிரதமா் மோடியும் விவாதித்தனா்.

நேபாளத்துக்கு வருமாறு கே.பி. சா்மா ஓலி விடுத்த அழைப்பை பிரதமா் மோடி ஏற்றுக்கொண்டாா்.

குவைத் இளவரசா் ஷேக் ஷபா அல்-கலீத் அல் ஷபாவை சந்தித்த பிரதமா் மோடி, இருதரப்பு உறவுகள் மற்றும் தொடா்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி

தெரியுமா சேதி…?