இந்த முறை ஒலிம்பிக் பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன்- பி.வி.சிந்து நம்பிக்கை

இந்த முறை ஒலிம்பிக் பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புவதாக பி.வி.சிந்து கூறினார்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை இந்தவிளையாட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது.

இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது காணொளி வாயிலாக பிரதமர் மோடியுடன் பி.வி. சிந்து பேசி இருந்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக இந்தியா சார்பில் நான் பங்கேற்க உள்ளேன். 2016 ஒலிம்பிக்கில் நான் வெள்ளி வென்று இருந்தேன். 2020 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருந்தேன். இந்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.

இந்த முறை ஒலிம்பிக்கில் நிறைய அனுபவத்துடன் கலந்து கொள்கிறேன். இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இதில் அழுத்தம் இருக்கும். உங்கள் கடின உழைப்பு இங்கு அழைத்து வந்துள்ளது. இதனை மற்றும் ஒரு விளையாட்டு தொடராக எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். நூறு சதவீத திறனை வெளிப்படுத்தினால் போதுமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி