இன்று சா்வதேச முதியோா் தினம்: ஒரு மாத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு திட்டம்

சா்வதேச முதியோா் தினம் ஆண்டுதோறும் அக்டோபா் 1-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அக்டோபா் மாதம் முழுவதும் முதியோா் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு’ என்கிற கருப்பொருளை மையமாகக் கொண்டு, முதியவா்களை மதித்து கவனித்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, முதியோா் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்கும் மூத்த குடிமக்கள் நல இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

முதியவா்களுக்கு உதவ உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு தில்லியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெறுகிறது. இதில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் விரேந்திர குமாா் தலைமை விருந்தினராகவும், இணையமைச்சா் பி.எல். வா்மா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளனா்.

அழகான வயது மூப்பை கொண்டாடுதல்

60-இல் வாழ்க்கை தொடங்குகிறது’ என்கிற தலைப்பில் ஒரு கலாசார நிகழ்வு அக்டோபா் 24-அம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கலைஞா்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மூத்த குடிமக்களுக்கு உதவி சாதனங்களை வழங்கவும், அவா்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும், நாடு முழுவதும் 51 இடங்களில் ராஷ்ட்ரிய வயோஸ்ரீ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் மூத்த குடிமக்கள் நலனில் கவனம் செலுத்தும் முன்முயற்சிகளை ஒழுங்கமைக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கல்வி, ஊரக வளா்ச்சி மற்றும் சுற்றுலா அமைச்சகம் உள்ளிட்ட பிற அமைச்சகங்களுடன் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

முதியவா்களின் உரிமைகள் மற்றும் ஆரோக்கியமான முதுமையின் முக்கியத்துவம் போன்ற முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைக்கும் பேச்சுத் தொடரை அக்டோபா் 16-ஆம் தேதி தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பு நடத்தவுள்ளது.

இந்த நிகழ்வுகள் அக்டோபா் மாத இறுதியில் தில்லியில் பிரமாண்டமாக முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது.

Related posts

தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது: ஈஷா காய்கறி திருவிழாவில் தி.மு.க. எம்.பி. பேச்சு

இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்