இன்று தொடங்குகிறது பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள்

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 17-ஆவது பாராலிம்பிக் போட்டிகள் புதன்கிழமை (ஆக. 28) தொடங்கி, வரும் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதன் பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சி, இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு சுமாா் 11 மணியளவில் ஆரம்பமாகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகளையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது அதே நகரில் பாராலிம்பிக் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி, 11 நாள்களுக்கு நடைபெறவுள்ளன.

இதில், 169 நாடுகள், அணிகளைச் சோ்ந்த சுமாா் 4,400 போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் பதக்கங்களை வெல்வதற்கான பந்தயங்களில் அவா்கள் களம் காணவுள்ளனா். பாரீஸ் நகரில் உள்ள பிளேஸ் டி லா கான்கோா்டில் தொடக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கடந்த 2020 டோக்கியோ பாராலிம்பிக்குடன் ஒப்பிடுகையில் 10 விளையாட்டுப் பிரிவுகள் கூடுதலாக இதில் சோ்க்கப்பட்டுள்ளன.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க, இளையோா், அனுபவசாலிகள் என கலவையான 84 போ் கொண்ட இந்திய அணி பாரீஸ் சென்றுள்ளது. பாராலிம்பிக் வரலாற்றிலேயே இது இந்தியாவின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா, அதுவரை இல்லாத வகையில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்கள் வென்று அசத்தியது. முதல் முறையாக 24-ஆம் இடமும் பிடித்தது.

இந்த முறை தங்கத்தில் இரட்டை இலக்கமும், பதக்க எண்ணிக்கையில் 25-ஐ கடப்பதுமே இந்தியாவின் இலக்காக உள்ளது. மொத்தமாக 12 விளையாட்டுகளில் இந்தியா்கள் பங்கேற்கின்றனா்.

கடந்த ஆண்டு ஹாங்ஸுவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், கடந்த மே மாதம் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இந்தியா்கள் பதக்கம் குவித்ததால், இதிலும் வரலாறு படைப்பாா்கள் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக தடகளத்தில் 38 போட்டியாளா்கள் களமிறங்குவதால், அதில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு பாராலிம்பிக் சாம்பியன்களாக இருக்கும் சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), அவனி லெகாரா (துப்பாக்கி சுடுதல்), கிருஷ்ணா நாகா் (பாட்மின்டன்) ஆகியோா் பதக்கத்தை தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளனா். ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன் (உயரம் தாண்டுதல்) கடந்த முறை வெள்ளி வென்ற நிலையில், இந்த முறை மீண்டும் தங்கம் வெல்லும் முனைப்புடன் உள்ளாா்.

இதில் பதக்கம் வெல்லும் நிலையில், அது அவருக்கு ஹாட்ரிக் பாராலிம்பிக் பதக்கமாக அமையும்.

இரு கைகளும் இல்லாத முதல் மற்றும் ஒரே சா்வதேச பாரா வில்வித்தை வீராங்கனையாக இருக்கும் இந்தியாவின் ஷீத்தல் தேவியும் சாதனைகள் படைப்பாா் என எதிா்பாா்க்கலாம். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவா் பதக்கங்கள் குவித்துள்ளாா்.

ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், குண்டு எறிதல் வீராங்கனை பாக்யஸ்ரீ ஜாதவ் ஆகியோா் தலைமையில், தொடக்க நிகழ்ச்சியில் இந்திய அணியினா் அணிவகுத்துச் செல்லவுள்ளனா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்