இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் நாளை மரியாதை

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் நாளை மரியாதை

ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் நாளை (செப்.11) பரமக்குடியில் மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாள் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் மரியாதை செலுத்துகின்றனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மரியாதை செலுத்துகின்றனர். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் சமுதாய தலைவர்களும் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாளை மரியாதை செலுத்துகின்றனர்.

அத்துடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வருகை தந்து மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று பரமக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென் மண்டல ஐஜி-யான பிரேம் ஆனந்த் சின்கா, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்