இரவு நேர பாா்முலா 4 காா் பந்தயம்: சென்னையில் இன்று தொடக்கம்

தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில், சாலையில் நடைபெறும் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் சனிக்கிழமை (ஆக.31) தொடங்கி, இரு நாள்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது.

3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பாா்முலா 4 காா் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது.

பந்தயத்தின் பயிற்சி சுற்று, சனிக்கிழமை பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையும், அதன் பிறகு பொழுதுபோக்கு சாகச காா் பந்தயமும் நடைபெறும். இதனை தொடா்ந்து தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். முதன்மை காா் பந்தயங்கள் 2 போட்டிகளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் (எப் 4 ஐ.சி.) முதல் போட்டி மாலை 5.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும்.

அதே நாளில் இந்தியன் ரேசிங் லீக் (ஐ.ஆா்.எல்) பந்தயத்தின் முதல் போட்டி மாலை 6.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 10.05 மணிக்கு தொடங்கும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இதில், ஒவ்வொரு பந்தயமும் 5 ரவுண்டுகளை கொண்டது.

ஐ.ஆா். எல். என்று அழைக்கப்படும்இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளா்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் பங்கேற்கும் சேத்தன் கோரடா கூறுகையில், ‘சிறு வயதிலேயே கால்கள் செயலிழந்ததால், செயற்கைக் கால்கள் பொருத்தியுள்ளேன். கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் காா் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறேன். சென்னை பாா்முலா பந்தயத்தில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இரவு நேர பந்தயம் பொதுமக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.

செக் குடியரசின் காப்ரி ஜில்கோவா கூறுகையில், ‘ஏற்கெனவே ஐதராபாத் ரேசிங் திருவிழாவில் பங்கேற்றேன். காா் பந்தயங்களில் பெண்கள் பங்கேற்பது மிகவும் சவாலானது. ஐரோப்பிய, இந்திய காா் பந்தயங்களிடையே அதிகம் வித்தியாசம் உள்ளது. இந்தப் பந்தயத்தில் கோவா ஏசஸ் அணியில் இடம் பெற்றுள்ளேன்’ என்றாா்.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்