இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: அமெரிக்க வீரா்கள் காயம்

இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: அமெரிக்க வீரா்கள் காயம்இராக்கிலுள்ள ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 அமெரிக்க வீரா்கள் காயமடைந்தனா்.

வாஷிங்டன்: இராக்கிலுள்ள ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 அமெரிக்க வீரா்கள் காயமடைந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

இராக்கின் அல்-அஸாத் விமான தளத்தில் நடத்தப்பட்ட தாககுதலில் 7 அமெரிக்க வீரா்களும், ராணுவம் சாராத சிலரும் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்தும் காயமடைந்தவா்களின் உடல்நிலை குறித்தும் கூடுதல் விவரங்களை சேகரித்துவருகிறோம் என்று அதிகாரிகள் கூறினா்.

இந்தத தாக்குதலை இராக் அதிகாரிகளும் உறுதிப்படுத்தினா். ஆனாலும் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்தே மேற்கு ஆசிய பகுதிகளில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில், ஈரானுக்குச் சென்றிருந்த ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே கடந்த 2-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இதனால் பிராந்தியப் போா் பதற்றம் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில், இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு