இலங்கையில் இடி மின்னலுடன் கனமழை- 15 பேர் பலி

மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொழும்பு:

இலங்கையில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சீரற்ற கால நிலையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன.

மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கொழும்பு உட்பட 7 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது.

மொத்தம் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 4000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளுக்காக படகுகளுடன் கூடிய 7 குழுக்களை இலங்கை ராணுவம் அனுப்பி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி அவசர நடவடிக்கைக்காக விமானப்படை 3 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை

உருகும் பனிப்பாறைகள்.. ஐ.நா. பொது சபையில் பிரச்சினையை முன்வைக்கும் நேபாள பிரதமர்

கனடாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு