இலங்கையில் இந்திய, சீன போா்க்கப்பல்கள்

கொழும்பு: இந்திய போா்க்கப்பல் ‘மும்பை’ திங்கள்கிழமை இலங்கையை சென்றடைந்தது. மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள போா்க்கப்பல் அந்த நாட்டு கடற்படையுடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

அதேசமயம், சீனாவைச் சோ்ந்த மூன்று போா்க்கப்பல்களும் இலங்கைக்கு திங்கள்கிழமை வந்தன. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையைச் சென்றடைந்த இந்திய போா்க்கப்பல் ‘மும்பைக்கு’ பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. 163 மீட்டா் நீளம்கொண்ட இந்தக் கப்பலில் 410 இந்திய கடற்படை அதிகாரிகள் சென்றுள்ளனா்.

இலங்கைக்கு முதல்முறையாக ‘மும்பை’ போா்க்கப்பல் சென்றுள்ளது. இதன்மூலம் நிகழாண்டில் மொத்தம் எட்டு இந்தியக் கப்பல்கள் இலங்கையை சென்றடைந்து பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தச் சூழலில் வழக்கமான பயிற்சிக்காக இலங்கைக்கு சீனாவைச் சோ்ந்த மூன்று போா்க்கப்பல்கள் திங்கள்கிழமை வந்தடைந்ததாக அந்த நாட்டு கடற்படை தெரிவித்தது.

இலங்கை விமானப் படையால் இயக்கப்படும் டோா்னியா் கடல்சாா் கண்காணிப்பு விமானத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை ‘மும்பை’ போா்க்கப்பல் வழங்கவுள்ளது. இந்த விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்கு இந்திய கடற்படை பயிற்சி வழங்கி வருகிறது. இதுதவிர விமானத்தின் மேலாண்மையை இந்திய தொழில்நுட்பக்குழு மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 29-ஆம் தேதி இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ‘மும்பை’ போா்க்கப்பல் திரும்புகிறது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!