இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: ரணில், சஜித், அநுர குமார இடையே மும்முனை போட்டி

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: ரணில், சஜித், அநுர குமார இடையே மும்முனை போட்டி

ராமேசுவரம்: இலங்கையின் ஒன்பதாவது அதிபர் தேர்தல் நாளை (செப்.21) தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அநுர குமார திசாநாயக்க ஆகிய மூவரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

2019-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச 52 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இடைக்கால அதிபரான ரணில்: உலகளாவிய கரோனா பரவல், அதனை தொடர்ந்து இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி முறைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களினால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து 22.07.2022 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கையில் அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் செப்டம்பர் 21 அன்று இலங்கை அதிபர் தேர்தலை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தை தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 39 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் சுயேச்சை வேட்பாளர் ஏ.முகமது இலியாஸ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மரணமடைந்ததால், தற்போது அதிபர் தேர்தலில் 38 பேர் களத்தில் உள்ளனர்.இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

நமல் ராஜபக்ச | அரியநேந்திரன்

கட்சிகளின் நிலைப்பாடு: ரணில் விக்ரமசிங்கேவைப் பொறுத்தவரை அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தாலும், சுயேச்சையாகக் களமிறங்கி உள்ளார். அவருக்கு பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிலரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவை ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சி, மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக உள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பல்வேறு கட்சிகளைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பில் நிற்கிறார். இவருக்கு இடதுசாரி அமைப்புகளின் ஆதரவு உள்ளது.

மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக களத்தில் உள்ளார்.

மேலும், மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில் சில தமிழ் அமைப்புகளின் சார்பாக தமிழர்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

வேட்பாளர்களின் வாக்குறுதிகள்: ரணில் விக்ரமசிங்க இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதாகக் கூறியும், சஜித் பிரமதாச, அனைவருக்கும் வளர்ச்சி தருவேன், கல்வி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும், அநுர குமார திசாநாயக்க ஊழலற்ற ஆட்சி தருவேன் என வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: இலங்கை முழுவதும் 22 மாவட்டங்களில் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,71,40,354 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்களிப்பு துவங்கி மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிப்பர். வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் மாலை 7 மணி முதல் முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். ஞாயிற்றுக்கிழமை மதியம் இலங்கையின் புதிய அதிபர் யார் என்று அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பாதுகாப்பிற்காக 61,000 காவல்துறையினரும், 9,000 சிவில் பாது­காப்பு படை­யினர் பாதுகாப்புப் பணியில் நாடு முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்