இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்கள் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருக்குவளை: இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் நாகை செருதூர் பகுதி மீனவர்களின் நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் உதவியோடு பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மதியம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழக மீனவர்களை மிரட்டும் நோக்கில் அவர்களது படகின் மீது இலங்கை கடற்படையினர் மோதியதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை கப்பல் மீனவர்களின் பைபர் படகு மீது மோதியதில் பைபர் படகு கடலில் கவிழ்ந்ததால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதில் படகில் சென்ற கார்த்திக், சக்திவேல், தர்மராஜ் ஆகிய 3 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரை வந்த நிலையில் சதீஷ் என்ற மீனவர் காணமால் போன நிலையில் தற்போது அவரையும் மற்ற மீனவர்கள் மீட்டு கரை திரும்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற்படை கப்பல் மோதிய விபத்தில் 600 கிலோ எடை கொண்ட வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் மூழ்கி விட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குமா ஃபோர்டு? – முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை!

இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தப்படுவதும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.

இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே தமிழக மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!