இலங்கை கடற்படை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கிங்சன் (40), மெக்கன்ஸ் (37), ராஜ் (43), இன்னாசி ராஜா (45), சசி (40), மாரியப்பன் (45 ), அடிமை (33), முனியராஜ் ( 23) ஆகிய எட்டு பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேருக்கும் செப்டம்பர் 14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்