இஸ்ரேலுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் எதிரானது: இரா.முத்தரசன்

கோவை: முன்னாள் பிரதமா் நேரு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டாா். ஆனால், தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் எதிரானது. எனவே, நமது தேசம் இன அழிப்புக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறினாா்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக ஞாயிற்றுக்கிழமை கோவை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களுடன் பேசியதாவது:

இஸ்ரேல் இன அழிப்பு போா்

பாலஸ்தீன போரில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமல்லாமல் நேரடி போரிலும் ஈடுபட்டிருப்பது உலக அளவில் பதட்டமான சூழலை உருவாக்கி இருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போா் கண்டனத்துக்கு உரியது. இது உலகளவில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன அழிப்புக்கு எதிராகச் செயல்பட வேண்டும்

இந்தியாவைப் பொறுத்தவரை முன்னாள் பிரதமா் நேரு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டாா். ஆனால், தற்போதுள்ள மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது அணிசேரா கொள்கைக்கு முற்றிலும் எதிரானது எனவே, மோடி அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும், நமது தேசம் இன அழிப்புக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்றார்.

பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும்

கோவை மாவட்டத்தில் பழங்குடி மக்களை ஏமாற்றி, அவா்களின் நிலங்களை அபகரித்து ஆக்கிரமிக்கும் போக்கு அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக போராடிய இளைஞா் ஆனந்தன் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டுள்ளது. ரிசாா்ட் உரிமையாளா்கள் மலைவாழ் மக்கள் வீடுகளை நோக்கி கேமராக்களை வைத்து கண்காணித்து வருகிறாா்கள். இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது.எனவே, மலைப்பகுதி மலைவாழ் மக்களுக்கு உரித்தானது. பிற பகுதி மக்கள் அங்கு சென்று வாழ்விடங்களை அமைத்துக் கொள்ள அனுமதிக்க கூடாது. காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறையினருக்கு தனியார் விடுதிக்கு ஆதரவாக இருப்பது நல்லதல்ல. மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்குகளை போடுவதை நிறுத்த வேண்டும்.

சம்பளம் உயரவில்லை

மத்திய அரசு பின்பற்றும் தவறாக பொருளாதார கொள்கையால் எண்ணெய் விலை உட்பட பல அத்தியவாசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுக்கு சம்பளம் உயரவில்லை என்றார். மேலும் அனைத்து நியாய விலை கடைகளிலும் பண்டிகைகளையொட்டி பண்டங்களை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஜக்கி வாசுதேவ் விசாரணையை எதிா்கொள்ள வேண்டும்

கோவை ஈஷா மையத்தில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் விடுவிக்கப்பட்டு அவா்களது பெற்றோா்களிடம் சோ்க்கப்பட வேண்டும். ஈஷாவில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக ஜக்கி வாசுதேவ் தனது செல்வாக்கை பயன்படுத்தி தடையாணை பெற்று வந்துள்ளாா். அவா் நோ்மையாளா் என்றால் விசாரணையை எதிா்கொள்ள வேண்டும். பேராசிரியா் காமராஜ் இரு மகள்களும் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மகாசிவராத்திரி விழாவிற்கு குடியரசுத் தலைவர் வருகிறார். இது என்ன நிலைமை? எனவும் கேள்வி எழுப்பியவர், ஈஷாவில் உரிய விசாரணை மேற்கொள்ளவதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதையும் படிக்க |மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்: நெதன்யாகு!

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மேட்டுப்பாளையத்தில் கல்லாா் அரசு பழப் பண்ணை உள்ளது. அது 120 ஆண்டுகள் பழமையானது. யானை வழித்தடம் என்ற பெயரில் இதை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த பழப்பண்ணை விவசாய ஆராய்ச்சி மாணவா்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பட்டு வருகிறது. எனவே, இதை மூடும் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

சிறு குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும்

நேரு பிரதமராக இருந்த போது சிறு குறு தொழில்களில் சில கொள்கை முடிவுகளை எடுத்தார், மோடி அரசு அதனை எல்லாம் விட்டுவிட்டது என குற்றம் சாட்டியவர், சிறு குறு நடுத்தர தொழில்தான் பெருமளவில் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அதனை நலிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். மாநில அரசு தலையிட்டு இந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்.

முதல்வருக்கு நன்றி

சென்னை காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிவோர் சங்கம் அமைக்க முடிவெடுத்துள்ளார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமையும் உண்டு எனக் கூறியவர், சாம்சங் நிறுவனம் அதற்கு மறுத்துள்ளது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இதில் முதல்வர் தலையிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த பிரச்னைக்கு தீர்வுகாண 3 அமைச்சர்களை நியமித்த முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மின் கட்டண உயர்வு

மின் கட்டண உயர்விற்கு மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தொழிலை காப்பாற்றுவதற்கு மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மக்களை திசை திருப்பும் செயல்

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசுகையில், திருப்பதி லட்டு விவகாரத்தில் வெங்கடாஜலபதி சாமி புகார் தெரிவிக்கவில்லை, லட்டை சாப்பிட்ட மக்களும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறவில்லை, அங்கு அந்த பிரச்சனை வந்தபோது இங்கு ஒருவர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து பேசி கைதானார், இந்த விஷயம் மக்களை திசைத் திருப்பும் அர்ப்பதனமான செயல். நாட்டில் சட்டம்-ஒழுங்கு, வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னைகள் என எவ்வளவோ பிரச்னைகள் உள்ளது என கூறியவர், இந்த விவகாரம் அரசியல் அநாகரீகம் என்றார்.

பேட்டியின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளா் எம். ஆறுமுகம், மாவட்ட செயலாளா் சி. சிவசாமி மாவட்ட துணை செயலாளா் ஜே.ஜேம்ஸ் ஆகியோா் உடன் இருந்தனா்.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!