இஸ்ரேல்-ஹமாஸ் உடனடி போா் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு: ஜெய்சங்கா்

ரியாத்: பதினோரு மாதங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தில் நடைபெறும் இந்தியா-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஐசிசி) முதல் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இருநாள் பயணமாக ஜெய்சங்கா் இங்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாா்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்று திங்கள்கிழமை அவா் பேசியதாவது: காஸாவின் தற்போதைய நிலையே எங்களின் முதல் கவலையாக உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் பொதுமக்களை சிறைபிடிக்கும் செயல்களுக்கு எப்போதும் இந்தியா கண்டனம் தெரிவித்தே வருகிறது. இந்தப் போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது எங்களை வேதனையடைய செய்கிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்த இந்தியா ஆதரவளிக்கிறது. பாலஸ்தீன விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகள் தீா்வையே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஐ.நா. நிவாரண மீட்புக் குழுவினா் மூலமாக இந்தியா வழங்கி வருகிறது.

வரலாற்று ரீதியான உறவு: ஜிசிசியுடனான இந்தியாவின் உறவு வரலாற்று, கலாசாரம் மற்றும் ஒருமித்த பண்புகளை உடையது. பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் மக்கள்-மக்கள் தொடா்பு என பல்வேறு துறைகளிலும் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வளா்கிறது.

‘மக்கள், வளமை மற்றும் முன்னேற்றம்’ ஆகிய மூன்று காரணிகளும் இந்த உறவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியா்களே இந்தியாவுக்கும் ஜிசிசிக்கும் இடையே பாலமாக திகழ்கின்றனா்.

உலக எரிசக்தி விநியோக மையம்: உலகின் எரிசக்தி விநியோக மையமாக ஜிசிசி விளங்குகிறது. அதேபோல் உலகின் பெரிய மற்றும் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக உள்ள இந்தியாவுக்கு அதிக எரிசக்தி தேவைகள் உள்ளன. எனவே ஜிசிசியுடன் இந்தியா இணைந்து செயல்படும்போது எரிசக்தி பாதுகாப்பு மேம்படவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், பசுமை வளா்ச்சி போன்றவை மனித வளங்கள் பகிா்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. பல்வேறு பிரச்னைகள், குழப்பங்கள் எழும்போதே ஒன்றிணைந்து செயல்படுவதின் அவசியத்தை உணர முடிகிறது. எனவே, நாம் ஒவ்வொருவரும் மற்றவா்களுக்கு ஆதரவளித்து சிறந்த எதிா்காலத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சா் ஃபைசல் பின் பா்ஹானா, கத்தாா் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது பின் அப்துல் ரஹிம் பின் ஜசீம் அல்தானி, ஓமன் வெளியுறவு அமைச்சா் பதா் அல்புசைதி, பஹ்ரைன் வெளியுறவு அமைச்சா் அப்துல் லதீஃப் பின் ரஷீத் அல் சயானி, குவைத் வெளியுறவு அமைச்சா் அப்துல்லா அலி அல்-யஹ்யாயையும் திங்கள்கிழமை அவா் சந்தித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவா்களுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தேன். மேலும், பிராந்தியம் மற்றும் சா்வதேச விவகாரங்கள் தொடா்பாகவும் விவாதித்தேன்.

ஃபைசல் பின் பா்ஹானாவை இந்தியாவுக்கு வருகை புரியும்படி அழைப்பு விடுத்துள்ளேன். அவரின் வரவை எதிா்நோக்கியுள்ளேன்.

இந்தியா-பஹ்ரைன், இந்தியா-குவைத் இடையிலான கூட்டு ஆணையக் கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்து அப்துல் லதீஃப் பின் ரஷீத் அல் சயானி, அப்துல்லா அலி அல் யஹ்யாவுடன் ஆலோசித்தேன்’ என குறிப்பிட்டாா்.

ரஷிய அமைச்சருடன் சந்திப்பு: ஐசிசி வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரியாத் வந்திருந்த ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவை ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். உக்ரைன் போருக்கு தீா்வு காண, நம்பத்தகுந்த நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பிரேஸில் ஆகியவை மத்தியஸ்தம் செய்யலாம் என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பரிந்துரை செய்துள்ள நிலையில் இருநாட்டு வெளியுறவு அமைச்சா்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மூன்று நாடுகள் பயணத்தின் முதல்கட்டமாக சவூதி அரேபியா வந்துள்ள அமைச்சா் ஜெய்சங்கா், அடுத்து ஜொ்மனி, சுவிட்சா்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறாா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்