ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் – பலர் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

பாக்தாத்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.

ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்டார். அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த படைத்தளத்தை குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்