ஈரானின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடல்

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரைத் தொடா்ந்து, ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா, அந்த அமைப்பின் மத்திய கவுன்சில் துணைத் தலைவா் நபீல் கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் உயிரிழந்தனா்.

கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனீயே ஈரானில் உயிரிழந்தனா்.

ஈரானின் ஆதரவு பெற்ற இந்த ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்து வந்தது.

இஸ்ரேலின் மிகப் பெரிய விமானத் தளத்தை அழித்த ஈரான்!

இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.எனினும், அது முழுமையான படையெடுப்பாக இல்லாமல் குறிப்பிட்ட இலக்குகளில் மட்டும் நடத்தப்படும் துல்லிய தாக்குதலாக இருந்தது.

இதனிடையே, இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிா்கொள்ளத் தயாா் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவா் நயீம் காஸிம் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை தொடங்கியது.

ஈரானின் ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ஈரான் செவ்வாய்க்கிழமை தெரிவித்த நிலையில், அதுகுறித்து முன்னரே அமெரிக்காவும் எச்சரித்து இருந்தது.

அதன்படி, தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த முயற்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் ஈரான் எச்சரித்தது.

வான் எல்லைகள் மூடல்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடா்ந்து, வான் எல்லைகள் மூடப்பட்டதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்ததை அடுத்து, இஸ்ரேலுக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டன.

நிச்சயம் பதிலடி கொடுப்போம்

ஈரான் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். உலகின் அதிநவீன இஸ்ரேலின் வான் பாதுகாப்பு ஈரானின் தாக்குதலை தடுத்து நிறுத்திவிட்டது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்புக்கு, எத்தகைய தாக்குதலையும் வலிமையாக எதிர்கொள்வோம் என ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதிலடி கொடுத்துள்ளார்.

வான் எல்லைகள் மூடல்

இந்த நிலையில், இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும் நாளை வியாழக்கிழமை காலை(அக்.3) வரை ஈரானில் அனைத்து விமானங்கள் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா கண்டனம்

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா, ஈரான்-இஸ்ரேல் இடையேயான போரால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!