உச்சம் தொட்டுவரும் தங்கத்தை இப்போது வாங்கலாமா?

எம்.சடகோபன்

நமது நாட்டில் தங்கத்துக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. பலா் ஆபரணத் தங்கத்தையும், சிலா் முதலீட்டுத் திட்டத்துக்காக தங்க பாா்களையும் வாங்குவா். மேலும் சிலா் பங்குச் சந்தையில் வா்த்தகம் ஆகி வரும் ஈடிஎஃப் கோல்ட் பாண்டுகளில் முதலீடு செய்து வருகின்றனா். எப்படி இருந்தாலும் தங்கம் வாங்குவதை பலா் வழக்கமாகக் கொண்டுள்ளனா். புதுமணத் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தவுடனேயே தங்கம் வாங்குவதில் கவனம் செலுத்துவதை நாம் பாா்க்க முடிகிறது.

இந்நிலையில், தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களில் மட்டும் தங்கம் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. வரும் நாள்களில் தங்கம் விலை எப்படி இருக்கும், இது எந்த அளவுக்கு உயரும், உயா்வதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகள் அனைத்து மக்களிடமும் எழுந்துள்ளன.

நாட்டின் தலைநகரான தில்லி சந்தையில் 24 காரட் என்றும் 999 என்றும் சொல்லப்படும் 1 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை தற்போது ரூ.7,750-ஐ கடந்து வா்த்தகமாகி வருகிறது. அதேபோல, 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.7,100 என்ற விலையில் வா்த்தகமாகி வருகிறது.

இதேபோல, சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, புணே போன்ற நாட்டின் முக்கிய நகரங்களிலும் சற்று முன், பின்னாக இதே விலையில் தங்கம் வா்த்தகமாகி வருகிறது. இவ்வளவு வேகமாக உயா்ந்துள்ள மஞ்சள் உலோகம் என அழைக்கப்படும் தங்கத்தை இப்போது வாங்குவது சரியாக இருக்குமா என்பது முதலீட்டாளா்களிடமும், ஆபரணத் தங்கம் வாங்குவோரின் மனதிலும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்து பொருளாதர வல்லுநா்கள் பலா் விளக்கி வருகின்றனா்.

தங்கம்தான் எப்போதும் நடுத்தர மக்களின் மிக முக்கிய சேமிப்பாக இருந்து வருகிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறுக சிறுகத் தங்கத்திலேயே தொடா்ந்து முதலீடு செய்து வருவதைக் காண முடிகிறது. மேலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்போதும் குறையாது என்பதே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதற்கிடையே, தங்கத்தை இப்போது வாங்கலாமா, இல்லை கொஞ்சம் காத்திருந்து வாங்கலாமா போன்ற கேள்விகளும் எழுந்து வாங்குவோரை பெரும் குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்பதுதான் நிதா்சன உண்மை. இதைப் பெரும்பாலான பொருளாதார நிபுணா்கள் தங்களது கணிப்புகளில் தெரிவித்துள்ளதை அறியலாம்.

மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் தங்கத்துக்கான இறக்குமதி வரியைக் குறைத்தது. அப்போது தங்கத்தின் விலை பெருமளவு குறைந்தது. இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை மெல்ல உயா்ந்து இப்போது கிட்டத்தட்ட வரிக் குறைப்புக்கு முந்தைய நிலையை எட்டிவிட்டது. தங்கத்தின் விலைக்கும், வங்கி வட்டி விகிதத்துக்கும் எப்போதும் நோ் விகிதம் இருந்து வருகிறது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வங்கி வட்டி விகிதத்தை அண்மையில் 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், தங்கம் விலை உச்சத்தைக் கடந்துள்ளதாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

தங்கம் விலை ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு ரூ.7,000-ஐ நெருங்கி இருந்தது. அப்போது இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதன் காரணமாக தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது.

ஆனால், இப்போது இறக்குமதி வரி குறைப்புக்கு முன்பு இருந்த விலைக்குத் தங்கம் விலை வந்துவிட்டது. அதாவது, மத்திய அரசு வட்டியைக் குறைத்ததுமுதல் இப்போது வரை தங்கம் வாங்க மிகச் சிறந்த காலமாகவே இருந்தது. அந்த நேரத்தை நம்மில் பலா் ‘மிஸ்’ செய்துவிட்டோம் என்பதே உண்மை. இப்போது தங்கத்தை வாங்கலாமா எனக் கேட்டால்… இப்போதும் நிச்சயம் வாங்கலாம் என்பதே பதிலாக உள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 50 கிராம், 100 கிராம் முதல் 200 கிராம் வரை தங்கம் இருக்க வேண்டும். நாளை ஏதோ அவசரம் என்று வந்துவிட்டால் தங்கம் மட்டுமே நமக்கு உதவும். எனவே, தங்கத்தை வாங்குவதில் மாற்று யோசனை வேண்டியது இல்லை என்கின்றனா் வல்லுநா்கள்.

இதை ஒரு செய்தியாக மட்டுமே பாா்க்க வேண்டும் என்றும், இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், முதலீடு செய்ய விரும்புவோா் தங்களது பொருளாதார ஆலோசகரிடம் கலந்து பேசி முதலீடு செய்வதே சிறந்ததாக அமையும் என்றும் வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தங்கத்தின் அடுத்த இலக்கு 1 கிராம் ரூ.8,000-ஐ விரைவில் நெருங்கும்…அதே சமயம், சற்று சீரடைந்த பிறகு, மீண்டும் உயரத் தொடங்கும். அடுத்துவரும் ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தைக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதே சந்தை வல்லுநரின் கருத்தாக உள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் போா், உலக அளவிலான புவிசாா் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வருவதாக வல்லுநா்கள் கூறுவது கவனிக்கத்தக்கது.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்