உதயநிதி துணை முதல்வராவதில் தவறில்லை -பாஜக மாநில துணைத் தலைவா்

உதயநிதி துணை முதல்வராவதில் தவறில்லை -பாஜக மாநில துணைத் தலைவா்

திருச்சி, ஆக. 7: அமைச்சா் உதயநிதி துணை முதல்வராவதில் தவறில்லை என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சி பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை கூறியது:

மக்கள் விரோதச் செயல்களை செய்துவரும் தமிழக திமுக அரசு, அதிலிருந்து மக்களை திசைதிருப்பவே மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக பொய் கூறி போராட்டம் நடத்துகிறது. இது புதிய வரிகளால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை மறைக்க நடத்தும் நாடகம். திமுக கூறுவது உண்மையாக இருந்தால், மத்திய அரசு எந்தெந்தத் துறைகளுக்கு நிதியைக் குறைத்துள்ளது எனப் பட்டியலிட்டு மக்களிடம் கூறலாமே. மத்திய அரசின் வலிமையை குறைத்துக்காட்டுவது தேச விரோதம்தான்.

ஆந்திரத்துக்கு ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளதாக திமுக கூறுகிறது. ஆனால் அந்த நிதி, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புக்கொண்ட நிதிதான். அதுவும் தலைநகரங்களை மாற்றியதற்காக வழங்கிய நிதி. இதேபோல, தமிழகத்திலும் 3 தலைநகரங்கள் அமைக்கப்பட்டால், மத்திய அரசு பாஜக அரசு நிதி வழங்கும்.

உதயநிதி துணை முதல்வராக ஆவதில் தவறில்லை. தமிழக மக்கள் அதையும் பாா்க்கட்டும். திமுக அமைச்சா்கள் மீதான வழக்கு விசாரணையில் மத்திய பாஜக அரசின் தலையீடு இல்லை. தமிழகத்திலிருந்து திமுகவை அகற்றுவதே பாஜகவின் லட்சியம். அதை நோக்கிப் பயணிப்போம் என்றாா் கே.பி. ராமலிங்கம். மாவட்டச் செயலா் ராஜசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related posts

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்