சென்னை,
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் முதல்-அமைச்சர் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், வரும் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது குறித்து இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுமா? அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, வரும் 19-ம் தேதிக்கு மேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராகலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.