உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் மீட்பு: செல்போனில் பேசி நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் மீட்பு: செல்போனில் பேசி நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை / கடலூர்: உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களிடம் நலம் விசாரித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி ஆன்மிக சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தால் அவர்கள் உத்தராகண்ட் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. ஆதிகைலாஷ் கோயிலுக்கு சென்றுசுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது, வழியில் ஆதிகைலாஷில் இருந்து 18 கி.மீ. தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு ஆசிரம பகுதியில் 30 பேரும் பாதுகாப்பாக தங்கினர்.நிலச்சரிவால் சாலை பாதிக்கப்பட்டதால், 6 நாட்களாக அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். போதிய உணவு, வாகனத்துக்கான எரிபொருள் வசதி இல்லாததால் 30 பேரும் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்களில், சிதம்பரத்தை சேர்ந்த ரவிசங்கர் – வசந்தா தம்பதி, சிதம்பரத்தில் உள்ள தங்களது மகன் ராஜனை கடந்த 14-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். ஆனால் அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதுபற்றி தகவலறிந்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமாரிடம் தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், நிலச்சரிவில் சிக்கியுள்ள 30 பேரையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, தலைமை செயலாளர் முருகானந்தம், கடலூர்மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உத்தராகண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு, தமிழகத்தை சேர்ந்த ஆன்மிக பயணிகளை ராணுவம், ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அங்குள்ள அதிகாரிகள், அனைத்து தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர். தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முதியோர்களை தனி கவனம் செலுத்தி கவனித்து வருகிறோம் என்று பதிலளித்தனர்.

இதுகுறித்து தகவல் அளித்த, தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம், வானிலை சீரானதும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும். அந்தமாநில அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என்றார். நேற்று வானிலைசீரானதும் நிலச் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக முதியவர்கள் 15 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். தொடர்ந்துமீதமுள்ள 15 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தமிழர்கள் 30 பேரும் காயம் ஏதுமின்றி மீட்கப்பட்டு, அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று உத்தராகண்ட் அரசு தெரிவித்தது. இந்த தகவலை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பராசக்தி என்பவருடன் நேற்று செல்போனில் பேசினார். அப்போது, ‘தமிழர்கள் 30 பேரையும் மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். நான் உங்களிடம் பேசினேன் என்று அனைவரிடமும் தெரிவியுங்கள்' என்று தெரிவித்தார். சுற்றுலா சென்ற அனைவரும், தங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வரும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர். முகாமில் உள்ள 30 தமிழர்களும் பத்திரமாக தர்சுலா என்ற நகரத்துக்கு அழைத்து வரப்படுவதாக உத்தராகண்ட் அரசுதெரிவித்துள்ளது. தர்சுலாவிலிருந்து அவர்கள் அனைவரும் டெல்லி வந்தடைந்த பின்னர், விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்