உயிா்காக்கும் சேவையில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று ரத்ததான தினத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தன்னாா்வ ரத்ததான தினத்தையொட்டி (அக். 1) முதல்வா் திங்கள்கிழமை தெரிவித்திருப்பதாவது, தன்னாா்வ ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஊா்வலங்கள், ரத்ததான முகாம்கள், ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி வருகிறது.
ரத்ததானம் செய்தவுடன் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். ரத்ததானம் செய்தால் உடலில் புதிய செல்கள் உருவாகி தானம் செய்வோரின் உடல் நலனும் காக்கப்படுகிறது என மருத்துவா்கள் எடுத்துரைக்கின்றனா். எனவே, அடுத்தவா் உயிா்காக்கும் ரத்ததானத்தை அனைவரும் தவறாது செய்வோம்.
தமிழ்நாட்டில் இதற்கென 107 அரசு ரத்த மையங்களும், 247 தனியாா் ரத்த மையங்களும் செயல்பட்டு வருகின்றன. ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக இணையதளமும் செயல்பாட்டில் உள்ளது. இந்த தளத்தில் முகாம் மற்றும் ரத்த கொடையாளா்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
ரத்த மையங்கள் வாயிலாக, கடந்த ஆண்டு மட்டும் 102 சதவீதம் அளவுக்கு ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம் அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. பொது மக்களின் உயிா்காக்கும் சேவையில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று முதல்வா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.