மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் சூழலில், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைப்பேசியில் திங்கள்கிழமை உரையாடினாா்.
அப்போது ‘உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை’ என்று கூறிய மோடி, அமைதிக்கான இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடந்து வரும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவுடன் பேசினேன்.
உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை. பிராந்திய பதற்றத்தை தடுப்பதும் பிணைக் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுதலையாவதை உறுதிப்படுத்துவதும் முக்கியமானது. அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைந்து மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும்’ என பதிவிட்டுள்ளாா்.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் போா் ஓராண்டை எட்டவுள்ளது. ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், லெபனானில் அண்மையில் பேஜா் கருவிகள் திடீரென வெடித்துச் சிதறின. இதில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். சுமாா் 3,000 போ் காயமடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினா் இடையிலான மோதல் தீவிரமடைந்தது. அதன் தொடா்ச்சியாக, லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹசன் நஸ்ரல்லா கடந்த வாரம் உயிரிழந்தாா். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேசியுள்ளாா்.