உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்கு வாய்ப்பு கேட்டு இந்தியா ‘பிடே’விடம் விண்ணப்பித்துள்ளது.
புதுடெல்லி,
கனடாவில் கடந்த மாதம் நடந்த கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ் கோப்பையை கைப்பற்றியதுடன், உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெற்றார். சாம்பியன்ஷிப்பில் விளையாடப்போகும் இளம் வீரர் என்ற பெருமையை 17 வயதான குகேஷ் பெற்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் அவர் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதுகிறார். இந்த போட்டி நவம்பர்- டிசம்பரில் நடைபெறுகிறது. ஆனால் போட்டிக்கான இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு உரிமை கோரி அதற்கான விண்ணப்பத்தை இந்திய செஸ் சம்மேளனம், சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் (பிடே) சமர்ப்பித்துள்ளது. உரிமம் கோருவதற்கு நாளை வரை அவகாசம் உள்ளது. இப்போதைக்கு இந்தியா தவிர வேறு எந்த நாடும் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் சிங்கப்பூரும் கோதாவில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பிடே' கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்தும் வாய்ப்பை எந்த நாட்டுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்படும் என்று 'பிடே' தலைமை செயல் அதிகாரி எமில் சுடோவ்ஸ்கி நேற்று தெரிவித்தார்.மொத்தம் 25 நாட்கள் நடக்க உள்ள இந்த போட்டிக்கான மொத்த பட்ஜெட் ரூ.71 கோடியாகும். இது தவிர 'பிடே' அமைப்புக்கு ரூ.9 கோடி போட்டி கட்டணமாக வழங்க வேண்டும். இந்த தொகைக்கு உத்தரவாதம் கொடுத்தால் மட்டும் உரிமம் கோர முடியும். எனவே இந்திய செஸ் சம்மேளனம் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றால் ரூ.71 கோடி செலவழிக்க வேண்டி இருக்கும்.
அத்துடன் 'பிடே' வழங்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.17 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஷிப் வாய்ப்பை இந்தியாவுக்கு 'பிடே' ஒதுக்கினால் சென்னையில் போட்டி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் குகேஷ் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். உலக செஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை அரங்கேறியுள்ளது. 2000-ம் ஆண்டில் டெல்லியிலும், 2013-ம் ஆண்டில் சென்னையிலும் நடந்துள்ளது நினைவு கூரத்தக்கது.