உ.பி.யில் கட்டடம் இடிந்ததில் 8 பேர் பலி: விசாரணைக் குழு அமைப்பு!

3 மாடிக் கட்டடம் இடிந்த விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. மேலும் 3 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து இன்று(செப். 8) மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லக்னெளவின் டிரான்ஸ்போா்ட் நகா் பகுதியில் இருந்த இக்கட்டடத்தின் தரை தளத்தில் வாகனங்கள் பழுதுபாா்க்கும் கடை ஒன்றும், சேமிப்பு கிடங்கும் செயல்பட்டு வந்தன. முதல் தளத்தில் மருத்துவ சேமிப்பு கிடங்கும், இரண்டாவது தளத்தில் வெட்டுக் கருவிகள் சேமிப்பு கிடங்கும் செயல்பட்டன. 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டடத்தில் தற்போது சில கட்டுமானப் பணிகள் நடந்துவந்த நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட 28 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தர பிரதேச அரசு 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணைக் குழுவினர் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!