உ.பி.யில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: பாஜக இன்று முக்கிய ஆலோசனை!

உத்தர பிரதேசத்தில் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து தில்லியில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. வருகிற நவம்பரில் தேர்தல் ஆணையம் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 10 தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த பாஜக இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.

இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ராகுல் காந்தி

தில்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக், பாஜகவின் பொதுச் செயலாளர் தரம்பால் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதில் 9 தொகுதிகளுக்கு 27 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சி தயார் செய்துள்ளது. எனவே, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு இறுதி வேட்பாளர்கள் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம்.

மேலும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி மீராபூர், கையர் ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ள நிலையில், மீராபூர் தொகுதியைக் ஒதுக்க தயாராக உள்ளது. ஆனால், கையர் தொகுதியைக் கொடுக்க பாஜக தயாராக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சி, கத்தாரி மற்றும் மஜ்வான் ஆகிய இரு தொகுதிகளைக் கோருகிறது.

எனவே இதுகுறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!