ஊக்கமருந்து சர்ச்சை: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா மீண்டும் இடைநீக்கம்

ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை கொடுக்க மறுத்ததன் காரணமாக பஜ்ரங் புனியாவை கடந்த மார்ச் மாதம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்தது

புதுடெல்லி,

இந்திய முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, கடந்த மார்ச் மாதம் அரியானா மாநிலம் சோனிபேட்டில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்றுக்கான இந்திய அணி தேர்வு போட்டியில் கலந்து கொண்டார். இதில் தோல்வி அடைந்த அவர் ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை கொடுக்க மறுத்து விட்டார்.

இதை தொடர்ந்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவரை இடைநீக்கம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங் புனியா ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம் முறையிட்டார். தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை குற்றச்சாட்டுக்கான அறிவிப்பை வெளியிடும் வரை பஜ்ரங் புனியாவின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அதிரடியாக அறிவித்தது.

இந்த நிலையில் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதாக பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகாமை நேற்று மீண்டும் இடைநீக்கம் செய்து, அதற்கான நோட்டீசை அவருக்கு அனுப்பியுள்ளது. அவர் விசாரணைக்கு வேண்டுகோள் விடுக்கவோ அல்லது குற்றச்சாட்டை ஏற்கவோ கால அவகாசமாக அடுத்த மாதம் 11-ம் தேதிவரை அளிக்கப்பட்டுள்ளது. 30 வயதான பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி