ஊருக்குப் பேருந்து.. டிசம்பர் முதல் ஊரகப் பகுதிகளிலும் சிறிய பேருந்து சேவை!

அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டபடி, அனைத்தும் செயல்பட்டால், வரும் டிசம்பர் மாதத்தில், ஊரகப் பகுதிகளிலும் சிறிய பேருந்து சேவை தொடங்கியிடும்.

சிறிய பேருந்துகளை இயக்குவதற்கான வழித்தடங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, வழிகாட்டுதல்களை உருவாக்குவது உள்ளிட்டப் பணிகள் அடுத்த 2 முதல் 3 மாதங்களில் நடைபெறவிருக்கிறது.

அதாவது, இந்த சிறிய பேருந்துகள் இயக்கமானது, ஒரு கிராமத்தில் குறைந்தது நூறு குடும்பங்கள் இருந்து, இதுவரை அரசுப் பேருந்தோ, தனியார் பேருந்தோ இயக்கப்படாத பகுதிகளில், சிறிய பேருந்துகள் வந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய பேருந்துகள் இயக்கப்படவிருக்கும் கிராமங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறு நகரங்களின் வழியாக இயக்கப்படவிருக்கும் வழித்தடத்தை போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மண்டல போக்குவரத்து அதிகாரிகளும் உருவாக்கி வருகிறார்கள்.

இது தொடர்பாக, கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என அனைவரையுடமும் கருத்துகளும் கேட்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு புதிய சிறிய பேருந்தும் 70 சதவீதம் பேருந்து வசதியற்ற பகுதிகளிலும், 30 சதவீதம் பேருந்து வசதியிருக்கும் பகுதியையும் இணைக்கும் வகையில் வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு, போக்குவரத்துத் துறை இது தொடர்பாக வரைவறிக்கையை வெளியிட்டிருந்தது. இருக்கும் சிறிய பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்வது மற்றும் நகர – ஊரகப் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய வழித்தடங்களை உருவாக்குவது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய திட்டத்தின்படி, சிறிய பேருந்துகள் 25 கிலோ மீட்டருக்குள் இயக்குவதற்கும், அதில் 17 கிலோ மீட்டர் பகுதி பேருந்து வசதியற்ற, 8 கிலோ மீட்டர் வசதி ஏற்கனவே பேருந்து வசதி இருக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு வருகிறது. ஏற்கனவே மினி பேருந்து இயக்கப்படும் பாதையிலேயே அதிகபட்சம் 4 கிலோ மீட்டர் வரை இயக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

மினி பேருந்து அதிகபட்சமாக 25 கிலோ மீட்டரும், குறைந்தபட்சமாக 10 கிலோ மீட்டர் அல்லது 15 கி.மீ. வரையிலும் தேவையை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது. விரைவில், விளக்கமாக விதிமுறைகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்