9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
நியூயார்க்,
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்களுக்கு இந்த இலக்கு கடினமாக இருக்கும் என்று தெரியும். நாங்கள் சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்ததற்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. முதிர்ச்சியைக் காட்டி வெற்றிக்கு அழைத்துச் சென்ற சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபேவுக்கு பாராட்டுகள்.
அமெரிக்க அணிக்கு விளையாடும் வீரர்களின் பலர் எங்களுடன் விளையாடி இருக்கிறார்கள். இவர்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். அவர்களின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு ரன் குவிப்பது கடினம்.எனவே பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். குறிப்பாக அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசினார்.
இன்று ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. எனவே ஷிவம் துபே பந்து வீச பயன்படுத்தப்பட்டார். இப்படியான விருப்பங்கள் தேவையாக இருக்கிறது. அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது பெரிய நிம்மதி. இங்கு கிரிக்கெட் விளையாடுவது எளிதானது கிடையாது. நாங்கள் வெற்றி பெற்ற மூன்று போட்டிகளிலும் அடிப்படை விஷயங்களை கடைசி வரை பின்பற்றினோம்.
இந்த வெற்றிகளின் மூலம் மிகுந்த நம்பிக்கையை பெறுவேன். சூர்யகுமார் யாதவ் தன்னிடம் வித்தியாசமான இந்த மாதிரி ஆட்டம் இருப்பதாகவும் காட்டி இருக்கிறார். அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் எதிர்பார்ப்பது இதைத்தான். ஆட்டத்தை ஆழமாக எடுத்து சென்று அணியை வெற்றி பெற வைத்ததற்கு சூர்ய குமார் யாதவுக்கு பெருமைகள் சேரும். இவ்வாறு அவர் கூறினார்.