‘எங்கள் முடிவே இறுதியானது!’-ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிடம் இஸ்ரேல் திட்டவட்டம்

ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் விவகாரத்தில் தங்களின் முடிவுதான் இறுதியானது என்று அமெரிக்காவிடம் இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்த அமெரிக்காவின் கருத்துகளை நாங்கள் கேட்டுக்கொள்வோம். ஆனால், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் நலனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் முடிவெடுப்போம். அந்த முடிவே இறுதியானதாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் தொலைபேசியில் கடந்த வாரம் உரையாடிய நெதன்யாகு, ஈரானின் ராணுவ நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் எனவும் அணுசக்தி மையங்கள் மற்றும் எரிசக்தி நிலைகள் குறிவைக்கப்படாது எனவும் பைடனிடம் உறுதியளித்ததாக அமெரிக்க உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் திங்கள்கிழமை கூறியிருந்தது.

ஆனால், நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் தொணி அதற்கு எதிா்மாறாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போா் நடைபெற்றுவருகிறது. இதில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினா் இஸ்ரேல் ராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்துவதால் அவா்களுக்கும் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையேயும் மோதல் நீடித்துவருகிறது.

இதற்கிடையே, ஈரான் வந்திருந்த ஹிஸ்புல்லா தலைவா் இஸ்மாயில் ஹனீயேவை இஸ்ரேல் உளவுப் பிரிவு கடந்த ஜூலை 31-ஆம் தேதி படுகொலை செய்தது. பின்னா் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவும் இஸ்ரேல் ராணுவத்தால் லெபனானில் கடந்த மாதம் 27-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.

இதற்குப் பழிவாங்கும் வகையில், இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து 180 அதிநவீன ஏவுகணைகளை ஈரான் இந்த மாதம் 1-ஆம் தேதி ஏவியது. அவற்றில் கணிசமானவை இடைமறித்து அழிக்கப்பட்டாலும், பல ஏவுகணைகள் இலக்கைத் தாக்கின.

இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளாா். எனினும், ஈரானின் அணு சக்தி மையங்களிலும் எண்ணெய் வயல்கள், கிடங்குகள் போன்ற எரிசக்தி நிலைகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்க அதிபா் பைடன் வலியுறுத்திவருகிறாா்.

இந்தச் சூழலில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்த விவகாரத்தில் தங்கள் முடிவே இறுதியானது என்று இஸ்ரேல் தற்போது திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

வந்து சோ்த்தது ‘தாட்’!

அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த, அதிநவீன ‘தாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடங்களின் பாகங்களும் அவற்றை இணைத்து, இயக்குவதற்கான அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குழுவும் இஸ்ரேலை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன.

‘டொ்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபன்ஸ்’ என்பன் சுருக்கமாக ‘தாட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை தளவாடங்கள், குறுகிய, நடுத்தர, இடைத் தொலைவு ரக பலிஸ்டிக் வகை (ராக்கெட்டைப் போல் பாய்ந்து செல்பவை) ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

பலிஸ்டிக் ஏவுகணைகள் அதிகபட்ச உயரத்துக்குச் சென்று பின்னா் கீழ் நோக்கி இறங்கும் நேரத்தில் (‘டொ்மினல்’ கட்டம்) அவற்றை அழிக்கும் வகையில் இந்த பான்பாதுகாப்பு தளவாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தளவாடங்களின் ஏவுகணைகளில் வெடிமருந்து பொருத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, உள்வரும் பலிஸ்டிக் வகை ஏவுகணைகள் மீது வேகமாக மோதுவதன் மூலம் அவற்றை ‘தாட்’ ஏவுகணைகள் அழிக்கின்றன.

ஈரான் கடந்த அக். 1-ஆம் தேதி சரமாரியாக வீசிய பல பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடங்கள் தவறியதாகக் கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேலிடம் ஏற்கெனவே இருந்த ‘தாட்’ வகை ஏவுகணைத் தளவாடம் ஈரானின் அந்தத் தாக்குதலில் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கு புதிதாக ‘தாட்’ ஏவுகணைத் தளவாடத்தையும் அதை இயக்குவதற்கான ராணுவ அதிகாரிகளையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது.

தங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது கடந்த முறை நடத்தியதைவிட மிக அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகளை வீசப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. எனவே, அத்தகைய சூழலில் இஸ்ரேலுக்கு உதவுவதற்காக ‘தாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடத்தை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

காஸா போரில் இஸ்ரேலின் அணுகுமுறை மற்றும் ஈரான் மீதான பதிலடி தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் கருத்து வேறுபாடு நிலவினாலும், இஸ்ரேலைப் பாதுகாக்கும் தங்கள் நாட்டின் உறுதிப்பாட்டை நிலைநாட்டுவதற்காக ‘தாட்’ தளவாடத்தை அந்த நாட்டுக்கு அனுப்புவதாக அதிபா் ஜோ பைடன் கூறியது நினைவுகூரத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது