எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஆட்சேபனை இல்லை: தயாநிதி மாறன் பதில் மனு

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொகுதி நிதியில் 95 சதவீதம் பயன்படுத்தியதை குறிப்பிட்டு அது இணையதளத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த முறை நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜரானார். தொடர்ந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,எடப்பாடி பழனிச்சாமியின் மனுவுக்கு பதில் மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த மனுவில் தனக்கு வயது 70 ஆகிறது என்றும், வயது மூப்பு காரணமாகவும் மருத்துவ காரணங்களால், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்ததால், அவரது கோரிக்கை நியாயமானதாக நீதிமன்றம் கருதினால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கின் மீதான விசாரணையை நீதிபதி வரும் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!