என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸ் இவைதான் – ஷிகர் தவான் பேட்டி

ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வு அறிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பக் காலங்களில் தடுமாறிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவுடன் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட ஷிகர் தவான் தங்க பேட் விருது வென்று 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல உதவினார். அப்போதிலிருந்து ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடிய அவர் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறினார்.

அவர் காயத்திலிருந்து குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறினார். அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்ட அவருக்கு போட்டியாக தற்போது ஜெய்ஸ்வால் போன்ற பல இளம் கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர். அதனால் தற்போது வருங்காலத்தை கருத்தில் கொண்டு 38 வயதில் ஓய்வு பெறுவதாக தவான் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 2013-ம் ஆண்டு மொஹாலியில் தனது அறிமுக டெஸ்ட் மற்றும் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த சதம் ஆகியவை மிகவும் பிடித்தது என்று தவான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எனக்கு பிடித்த எனது இன்னிங்ஸ் ஒன்றுக்கும் மேல் உள்ளது. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் 187 ரன்கள் அடித்ததாகும். குறிப்பாக 85 பந்துகளில் சதமடித்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த வீரராக உலக சாதனை படைத்தது பற்றி எனக்கு தெரியாது. அதே போல 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி. அப்போட்டியில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது பந்து 150 கி.மீ வேகத்தில் எனது இடது கட்டை விரலை தாக்கியது.

அதனால் காயமடைந்த நான் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்தேன். அப்போட்டியில் 109 பந்துகளில் 117 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றேன். 2015 உலகக்கோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 137 ரன்களும் பிடிக்கும்" என்று கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா