சென்னை,
நாட்டிலேயே முதல்முறையாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் – பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையிலான இந்த வளாகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது,
அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்த கருத்தரித்தல் மையம் துவங்கப்பட்டு உள்ளது.மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து, வெற்றியும் கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் கர்ப்பிணியரில், பிரசவத்தில் இறப்பு விகிதம் 70க்கும் மேல் இருந்தது.படிப்படியாக குறைத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் 54; கடந்தாண்டு 52; இந்தாண்டு 45 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட 3.9 சதவீத மகளிருக்கு கருத்தரிப்பின்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த செயற்கை கருத்தரித்தல் மையம் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.என தெரிவித்தார்.