எஸ்என்ஜேபிசி பரிந்துரைகள் நிலுவை: 18 மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் இன்று நேரில் ஆஜராக உச்சநீதின்றம் உத்தரவு

புது தில்லி: நீதிபதிகளுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகை, ஓய்வுகால பலன்களை வழங்குவது குறித்த இரண்டாவது தேசிய நீதிபதிகள் ஊதிய குழுவின் (எஸ்என்ஜேபிசி) பரிந்துரைகளை அமல்படுத்தாதது தொடா்பாக, தமிழகம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து இந்திய நீதிபதிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது.

அப்போது இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் கே.பரமேஸ்வரி கூறுகையில், ‘பல உத்தரவுகள் பிறப்பித்து கால நீட்டிப்புகள் வழங்கப்பட்டபோதிலும், எஸ்என்ஜேபிசி பரிந்துரைகளை 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுமையாகப் பின்பற்றவில்லை’ என்று தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘இந்த வழக்கு தொடா்பாக 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.27) நேரில் ஆஜராக வேண்டும். அவா்கள் ஆஜராக தவறினால், அவா்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தில்லி, ஜம்மு-காஷ்மீா் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டும்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!