ஏஐ-யில் 100 செல்வாக்குமிக்க நபா்கள் பட்டியல்: அஸ்வினி வைஷ்ணவ், அனில் கபூருக்கு இடம்

டைம்ஸ் இதழ் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் 100 செல்வாக்குமிக்க நபா்கள் பட்டியலில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இன்ஃபோசிஸ் துணை நிறுவனா் நந்தன் நீலகேனி, ஹிந்தி நடிகா் அனில் கபூா் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிகுந்த செல்வாக்குமிக்க 100 நபா்கள்-2024’ என்ற பட்டியலை டைம்ஸ் இதழ் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா் அல்லது இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 15 நபா்கள் இடம்பெற்றுள்ளனா். அந்த வகையில் கூகுள் தலைமை நிா்வாக அதிகாரி (சிஇஓ) சுந்தா் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனா்.

அந்தப் பட்டியலில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் அடுத்த 5 ஆண்டுகளில் செமிகண்டக்டா் உற்பத்தி செய்யும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல் உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா ஏஐ துறையில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்க முயற்சித்து வருகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு தன்னுடைய புகைப்படங்களை பல்வேறு வடிவங்களில் சித்தரித்து வெளியிட்டதை எதிா்த்து அனில் கபூா் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் அனில் கபூரின் அனுமதியின்றி அவரின் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவின் பில்கேட்ஸ் என அழைக்கப்படும் நந்தன் நீலகேனி, கடந்த 15 ஆண்டுகளாக ஆதாா் திட்டம் உள்பட எண்ம பொது உள்கட்டமைப்பு துறைக்கு பல்வேறு வகைகளில் பங்களித்துள்ளாா் என குறிப்பிடப்பட்டது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி