இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (நவ. 6) உயர்வுடன் முடிந்தது. அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் நேர்மறையான தாக்கத்தை இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்படுத்தியுள்ளது.
நிஃப்டி ஐடி பங்குகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4% வரை உயர்ந்துள்ளது. இதில் டிசிஎஸ், எச்சிஎல், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவற்றின் பங்குகள் 4 – 5 சதவீதம் வரை உயர்வுடன் காணப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 901.50 புள்ளிகள் உயர்ந்து 80,378.13 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.13 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 273.05 புள்ளிகள் உயர்ந்து 24,486.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.13% உயர்வாகும்.
25 நிறுவனப் பங்குகள் உயர்வு
வணிக நேரத் தொடக்கத்தில் நேர்மறையாகத் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக
80,569.73 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் அமெரிக்கத் தேர்தல் முடிவு அறிவிப்புகளுக்கு ஏற்ப சரிந்து 79,459.12 என்ற அதிகபட்ச சரிவையும் சந்தித்தது. வணிக நேர முடிவில் 901 உயர்ந்து 80,378 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 25 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 5 நிறுவனங்கள் மட்டுமே சரிவுடன் இருந்தன.
அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.24% வரை உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் 3.97%, டெக் மஹிந்திரா 3.74%, எச்.சி.எல். டெக் 3.66%, அதானி போர்ட்ஸ் 3.06%, எல்& டி 1.98%, மாருதி சுசூகி 1.65%, ரிலையன்ஸ் 1.54%, என்டிபிசி 1.44% உயர்வுடன் காணப்பட்டன.
இதேபோன்று டைட்டன் கம்பெனி நிறுவனப் பங்குகள் அதிகபட்சமாக -1.65% வரை சரிந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இந்தஸ்இந்த் வங்கி -1.15%, ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் -0.82%, ஆக்சிஸ் வங்கி -0.45%, எச்.சி.எஃப்.சி. வங்கி -0.15% உயர்ந்திருந்தன.
நிஃப்டி ஐடி 4% உயர்வு
அமெரிக்கத் தேர்தல் எதிரொலியாக நிஃப்டி பங்குகள் ஏற்றம் கண்டன. வணிகத்தின் தொடக்கத்தில் 24,308.75 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி, 24,537.60 புள்ளிகள் வரை உயர்ந்தது. இது இன்றைய நாளின் அதிகபட்ச உயர்வாகும். வணிக நேர முடிவில் 273 புள்ளிகள் உயர்ந்து 24,486 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
தேர்தல் முடிவுகளின் காரணமாக நிஃப்டி வங்கி, நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி நிதிச்சேவை, நிஃப்டி ஐடி, நிஃப்டி மெட்டல், என அனைத்துத் துறை பங்குகளும் நேர்மறையாக இருந்தன. அதிகபட்சமாக நிஃப்டி ஐடி பங்குகள் 4% வரை உயர்ந்திருந்தன.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஐஎஃப்சிஐ, கேனிஸ் டெக்னாலஜி, கிர்லோஸ்கர் ஆயில், டிக்சன் டெக், தேஜஸ் நெட்வொர்க், டிபி ரியாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
ஐடி பங்குகள் உயரக் காரணம் என்ன?
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மை பெற்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது, இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பலனளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் அவை அமெரிக்க நாணயத்தில் தங்கள் வருவாயில் கணிசமான பகுதியை உருவாக்குகின்றன. இன்றைய ஐடி துறை பங்குகள் உயர்ந்ததற்கான முக்கிய காரணமாக இது பார்க்கப்படுகிறது.
டாலர் மதிப்பு உயர்வால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய ஐடி நிறுவனங்களின் மீது தங்கள் ஆர்வத்தை செலுத்தவதும் மற்றொரு காரணமாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிக்க | ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!