ஏழை குழந்தைகளுக்காக நிதி திரட்டிய கே.எல்.ராகுல் – ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போன இந்திய கிரிக்கெட் வீரரின் ஜெர்சி

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் ஜெர்சி ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போய் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

மும்பை,

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல். இவர் சமீப காலமாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதையடுத்து அவர் துலீப் டிராபி தொடரில் விளையாட உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கே.எல். ராகுல் மற்றும் அவருடைய மனைவி அதியா ஷெட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குழந்தைகளின் தரமான கல்விக்காக பிரபல கிரிக்கெட் வீரர்களின் பொருட்களை வாங்கி ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கக்கூடிய பணத்தை அந்த குழந்தைகளுக்கு விப்லா அறக்கட்டளை மூலமாக கொடுக்கும் ஏல நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் ஜெர்சி ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போய் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. மேலும், விராட் கோலியின் பேட்டிங் கிளவுஸ் ரூ. 28 லட்சத்துகு ஏலம் போய் உள்ளது.

இந்த ஏலத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பேட் 24 லட்ச ரூபாய்க்கும், இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் பேட் 13 லட்ச ரூபாய்க்கும் ஏலம் போனது. மேலும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஜெர்சி மற்றும் கே.எல்.ராகுலின் பேட் தலா ரூ. 11 லட்சத்துக்கும் ஏலத்தில் விலை போனது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏலத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.1.93 கோடி நிதி திரட்டப்பட்டு இருக்கிறது. இந்த பணம் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை குழந்தைகளின் தரமான கல்விக்காக விப்லா அறக்கட்டளைக்கு கொடுக்கப்படுகிறது.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து