ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால் பல்வேறு துறைகளிலும், பணியாளர்களின் பங்களிப்பானது குறைவாகவே தேவைப்படுகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படும் பரிதாபமானதொரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் எண்ம(டிஜிட்டல்) முறையிலான பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ’போன்பே’, தங்களது வாடிக்கையாளர் சேவைப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களில் 60 சதவிகிதம் பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக பின்புலத்தில் இருப்பது ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பம்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆழமாக வேரூன்றி வரும் நிலையில், இனிவருங்காலங்களில், பணிநீக்க நடவடிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென்றே தகவல் தொழில்நுட்பத் துறை சார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PhonePe

அந்த வகையில், இன்று(அக்.21) தாக்கல் செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில், போன்பேவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் பணியாளர் எண்ணிக்கையானது சுமார் 1,100 பேரிலிருந்து வெறும் 400 ஆக குறைந்துள்ளதாத் தெரியவந்துள்ளது.

மறுபுறம், மேற்கண்ட பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட 2019 முதல் 2024 வரையிலான நிதியாண்டு காலக்கட்டத்தில், போன்பே மூலம் 40 மடங்கு அதிகமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போன்பேவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் வாடிக்கையாளர்கள் தரப்பு பிரச்சினைகளில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட சிக்கல்களுக்கு, பணியாட்களின் நேரடி உதவியின்றி, தொழில்நுட்ப உதவியுடன் தானியங்கி முறையில், அதிலும் குறிப்பாக, ஏ.ஐ. சாட்போட் தொழில்நுட்பத்தில் தீர்வு காணப்படுவதாகவும்

போன்பேவின் தொழில்நுட்ப மேம்பாடுகளால் இந்தியா முழுவதும் 22,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்” போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

எண்ம பணப்பரிவர்த்தனை முறைக்கான தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் வாய்ந்த, இந்தியாவின் முன்னணி பொறியாளர்களாக கருதப்படுவோரில், 1,500-க்கும் மேற்பட்டோரை ’போன்பே’ பணியமர்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BharatPe,

ஏ.ஐ. தொழில்நுட்பம் எந்தளவுக்கு தாக்கத்தை உண்டாக்கும்?

ஏ.ஐ. தொழில்நுட்பம் எந்தளவுக்கு தாக்கத்தை உண்டாக்கும் என்பதை கணித்துள்ளார் பொருளாதார வல்லுநரான நிக் பங்கர். அதன்படி, “பல்வேறு துறைகளிலும் ஏ.ஐ. தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இதன்காரணமாக, பரவலாகவும் அதிகப்படியாகவும் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் நிகழ வாய்ப்பில்லை.

கடந்த காலங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டவையும் இதை தெளிவுபடுத்துகிறது. ஆம்.. கடந்த காலங்களில் ஏற்பட்ட பல முக்கிய தொழில்நுட்ப மேம்பாடுகளால், பரவலாக ஆள்குறைப்பு நடவடிக்கைகள் நடைபெறவில்லை. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் சில பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படாமல் போனாலும், அதே தொழில்நுட்பங்கள்தான், வேறு சில வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தருகின்றன” என்றார்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவர் குழு!