ஐஎன்டியுசி தொழிற்சங்க தமிழக கிளையின் தற்காலிக நிர்வாக குழுவுக்கு இடைக்கால தடை

ஐஎன்டியுசி தொழிற்சங்க தமிழக கிளையின் தற்காலிக நிர்வாக குழுவுக்கு இடைக்கால தடை

சென்னை: ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் தமிழக கிளையை நிர்வகிக்க 32 பேர் கொண்ட தற்காலிக குழுவை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடந்த ஐஎன்டியுசி தமிழக கிளையின் 27-வது மாநில மாநாட்டில் ஜெகநாதன் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொழிற்சங்க சட்டப்படி தலைவர் ஜெகநாதன், ஐஎன்டியுசி சங்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், கோபிநாத் ஆகியோரை பொதுச்செயலாளர்களாகவும், ஜெயபால், ஆறுமுகம் உள்பட நான்கு பேரை செயலாளர்களாகவும் நியமித்தார்.

இந்நிலையில், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் தமிழக கிளையை நிர்வகிக்க, அதன் தலைவர் ஜெகநாதன் தலைமையில் 32 உறுப்பினர்கள் கொண்ட தற்காலிகக் குழுவை புதிதாக நியமித்து தேசிய தலைவர் சஞ்சீவரெட்டி கடந்த செப்.6 அன்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, பொதுச்செயலாளர்களான பன்னீர்செல்வம், கோபிநாத் மற்றும் செயலாளர்களான ஜெயகோபால் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘ஐஎன்டியுசி தலைவராக உள்ள ஜெகநாதனின் தவறான நிர்வாகத்தை தட்டிக்கேட்டதால், நிர்வாகிகளாக உள்ள எங்களிடம் எந்த விளக்கமும் கோராமல் தற்காலிக குழுவை நியமித்து இருப்பது சட்டவிரோதம். குற்றப்பின்னணி கொண்டவர்கள் தற்காலிக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளளனர்.

சங்கத்தின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் தலைவர் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அந்த தற்காலிக குழுவை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என அவர்கள் கோரியிருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் முன்பாக இன்று நடந்தது.

அப்போது நீதிபதி, “தொழிற்சங்க சட்ட விதிகளின்படி, தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிகக் குழுவை நியமிக்க மத்திய குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், மனுதாரர்கள் பதவி வகிக்கும் குழுவை கலைத்த பிறகே புதிய குழுவை நியமி்க்க முடியும். எனவே, தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் ஐஎன்டியுசி தற்காலிக குழு தலைவராக உள்ள தலைவர் ஜெகநாதன் மற்றும் மத்திய குழு பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.18-க்கு தள்ளி வைத்தார்.

Related posts

புளோரிடா மாகாணத்தை பந்தாடிய மில்டன் புயல்: 9 பேர் பலி

ஆசியான் மாநாடு: முக்கிய தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி

லாவோஸ் நாட்டில் ராமாயண நாடகத்தை கண்டுகளித்த பிரதமர் மோடி