இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தியது
முனிச்,
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் – போலந்து அணிகள் மோதின.பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் முதல் பாதி 0-0 என முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் 56வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே கோல்(பெனால்டி) அடித்தார். இதனால் 1-0 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது.ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் போலந்து அணியின் ராபர்ட் லெவன்டஸ்கி பதில் கோல் (பெனால்டி) அடித்தார். இறுதியில் 1–1 என ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.