ஐ.நா. செயலர் அவமதிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான கடிதத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை!

ஐ. நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸை அவமதிக்கும் விதத்தில் இஸ்ரேல் அரசு செயல்பட்டுள்ளதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம்?

மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ள பதற்றமான சூழலில், ஐ. நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, அன்டோனியோ குட்டெரெஸின் இஸ்ரேல் பயணம் குறித்து ஐ. நா. அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இஸ்ரேல் அரசு அளித்திருந்த பதில் கண்டனத்திற்குரியதாக அமைந்துள்ளது.

அந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் விதமாக கடந்த அக். 2-ஆம் தேதி இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘அக். 1-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஐ. நா. பொதுச் செயலர் கண்டனம் தெரிவிக்கவில்லை’ என்பது முக்கிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இஸ்ரேல் மண்ணில் காலடி வைக்க குட்டரெஸுக்கு தகுதியில்லை’ என்று கடுமையான வார்த்தைகளாலும் ஐ. நா. பொதுச் செயலர் விமர்சிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், ஈரானின் நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்து ஐ. நா. பொதுச் செயலர் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வருவது கவனிக்கத்தக்கது.

இதையும் படிக்க:ஐ.நா. அமைதிப் படை நிலைகளில் இஸ்ரேல் தாக்குதல்

இந்த நிலையில், ஐ. நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸை அவமதிக்கும் விதத்திலான இஸ்ரேலின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. அவையில் கடந்த வாரம் சிலி தரப்பில் கடிதம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.

இஸ்ரேலைக் கண்டித்து சிலி வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ள இந்த கடிதத்துக்கு ஆதரவு தெரிவித்து ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலைச் (யுஎன்எஸ்சி) சேர்ந்த பிரான்ஸ், ரஷியா, சீனா, ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து உள்பட 10 உறுப்பு நாடுகள் இந்த கடிதத்தை வழிமொழிந்துள்ளன. பிரேஸில், கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, உகாண்டா, இந்தோனேஷியா, ஸ்பெயின், கயானா, மெக்ஸிகோ, ஆப்பிரிக்க யூனியன், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, தெற்காசிய மற்றும் மேற்காசிய பிராந்தியங்களைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகள் என மொத்தம் 105 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதையும் படிக்க: மனித குலத்தின் மாபெரும் சக்தி அகிம்சை -மகாத்மா காந்தியை நினைவுகூா்ந்த ஐ.நா. செயலா்

இந்த நிலையில், பல்வேறு விவகாரங்களிலும் குறிப்பாக பாலஸ்தீனம் தொடர்பான முக்கிய விவகாரங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவரும் இந்தியா, மேற்கண்ட கடிதத்தில் கையெழுத்திடாமல் புறக்கணித்துள்ளது.

இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் இந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை. எனினும், இந்த விவகாரம் குறித்து வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க: சொல்லப் போனால்… உயிரின் விலை என்ன?

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!