ஐ.பி.எல். மெகா ஏலம்: ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்…? வெளியான தகவல்

2025 ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலத்தை நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே அனைத்து அணிகளின் உரிமையாளர்களுடன் பி.சி.சி.ஐ. ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் சில அணிகள் தரப்பில் 6 வீரர்கள் வரை தக்க வைக்கவும், 2 வீரர்களுக்கு ரைட் டூ மேட்ச் (RTM) கார்டு பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த மெகா ஏலத்தில் 4 வீரர்களை தக்க வைக்கவும், 2 வீரர்களுக்கு ரைட் டூ மேட்ச் கார்டு பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. சில அணிகள் தரப்பில் இதே விதி தொடர வேண்டும் என்று கூறப்பட்டது. அதேபோல் இந்திய வீரர்களை விடவும் வெளிநாடு வீரர்கள் அதிக ஊதியத்தை ஏலத்தில் பெறுவதாகவும் சில பேச்சுகள் எழுந்தன.

இந்த நிலையில் மெகா ஏலம் தொடர்பாகவும், ரீடெய்ன் பாலிசி தொடர்பாகவும் பி.சி.சி.ஐ. தரப்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒரு வீரரை ரைட் டூ மேட்ச் பயன்படுத்தி வேறு அணி ஏலத்தில் வாங்கிய பின் அதே ஏலத் தொகைக்கு அவரை தங்கள் அணிக்கு திரும்ப கொண்டு வரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்