ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 1,40,000 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் மேலும் 35 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்ததால் ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடானது. காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 15-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடக அணைகளில் இருந்து, சுமார் 2.5 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேலும் நீர்வரத்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்