ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 22,000 கன அடியாக அதிகரிப்புஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் மீண்டும் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் கா்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் கா்நாடகம், கேரளம் மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து மீண்டும் காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 8,000 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை காலை 19,000 கன அடியாகவும், மாலை விநாடிக்கு 22,000 கன அடியாகவும் அதிகரித்தது.
நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, பிரதான அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 26 ஆவது நாளாக தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை பூட்டப்பட்டுள்ளது.