ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறி பரிசல் இயக்கம்!

பென்னாகரம்: கர்நாடக அணைகளின் நீர் திறப்பு எதிரொலியால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், அந்தத் தடையை மீறி பரிசல் ஓட்டிகள் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குகின்றனர்.

கர்நாடக அணைகளின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து சுமார் வினாடிக்கு 20,000 கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு கடந்த இரண்டு நாள்களாக நீர்வரத்து அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்ததுள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும், அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிக தடை விதித்திருந்தார்.

ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின்

தடை உத்தரவின் பேரில் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சின்னாறு பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கமும் நிறுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்த நிலையில், பரிசல் ஓட்டிகள் சிலர் தடையை மீறி சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளுகின்றனர்.

பரிசல் பயணத்தின் போது பாதுகாப்பு உடை இன்றி அழைத்துச் செல்வதால் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக நிலை தடுமாறி நீரின் மூழ்கி உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறியும், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறியும் பரிசல் இயக்கும் பரிசல் ஓட்டிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!