‘ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமுதாயத்தையும் சந்தேகத்துடன் அணுகக் கூடாது’ – டிஜிபிக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்

‘ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமுதாயத்தையும் சந்தேகத்துடன் அணுகக் கூடாது’ – டிஜிபிக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்

சென்னை: ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமுதாயத்தையும் சந்தேக கண்ணோட்டத்துடன் அணுகக் கூடாது என்றும், அவ்வாறு போலீஸார் அணுகினால் அது நீதித் துறை மீதான நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்திவிடும் எனவும் தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எச்ஏஏ) தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார் ஆகியோர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: “தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள் சந்தித்து பல்வேறு சதித்திட்டங்களை தீட்டுவது குறித்தும், கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசித்துள்ளதாகக் கூறி வக்காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை மட்டுமே கைதிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என டிஜிபி அலுவலகம் சிறைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர்களுக்கு எதிராக பொத்தாம், பொதுவாக கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளை டிஜிபி திரும்பப்பெற வேண்டும்.

வழக்கறிஞர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், வழக்கறிஞர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையிலும் இந்த சுற்றறிக்கை உள்ளது. சிறையில் உள்ள கைதிகளை கட்சிக்காரர்கள் என்ற அடிப்படையில் சந்தித்துப் பேச வழக்கறிஞர்களுக்கு சட்ட ரீதியாக அனைத்து உரிமைகளும் உள்ளது. அந்த உரிமையை பறிக்கும் வகையில் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்து இருப்பது என்பது சுதந்திரமான நீதி பரிபாலனத்துக்கு எதிரானது.

ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமுதாயத்தையும் சந்தேக கண்ணோட்டத்துடன் அணுக முடியாது. அவ்வாறு போலீஸார் அணுகினால் அது நீதித்துறை மீதான நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தி விடும். எனவே, சிறையில் கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்து மற்றும் சதித்திட்டங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி டிஜிபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்,” என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு